👉ஸ்ரீ சங்கிலிசாமி காருகுறிச்சி
எத்தனையோ மகான்களின் பெயர், விபரங்கள் தெரியாதது போலவே இம்மகானுடைய பெயரும் மறைபொருளே,
தம் குருநாதராகிய கூனியூர் முத்துலிங்க சுவாமிகளால் "சங்கிலி" என்று அழைக்கப்பட்டதால் சங்கிலி சாமி என்று அழைக்கப்பட்டார்.
தற்பொழுது அச்சமாதி கோயிலின் முகப்பில் சங்கிலிபூதத்தார் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் சில பெயருடைய தெய்வங்களின் கோயில்கள் பரவலாக தென்படும் (இசக்கியம்மன் சுடலைமாடன் சங்கிலிபூதத்தார் போன்றவை) சங்கிலி என்னும் பெயரை வைத்து பின்னாளில் சங்கிலிபூதத்தார் என இம்மூர்தம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக பூதத்தார் கோயில்களில் கையில் ஆயுதம் தாங்கிய நிலையில் கம்பீரமான உருவம் நின்ற கோலத்தில் இருக்கும். இங்கு சிறிய புற்று வடிவமே கருவறையில் உள்ளது. வழக்கமான சங்கிலிபூதத்தார் கோயில் அமைப்பில் இருந்து மாறுபட்டு இருப்பதும், இது ஜீவ சமாதி கோயில் என உறுதிப்படுத்துகிறது.
இனி சுவாமிகள் பற்றிய செய்திகளை அறியபடுவன. கூனியூரில் ஜீவசமாதி கொண்டிருக்கும் முத்துலிங்க சுவாமிகள் தாமிரபரணி பகுதிக்கு வரும்போது அவருடன் மேலும் மூவர் வந்தனர். அவர்களுள் இருவர் சில காலம் கழித்து கீழே ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு சென்றுவிட்டனர். முத்துலிங்கம் சுவாமிகள் கூனியூரில் தங்கி அருளாட்சி செய்து வந்தனர். அப்போது ஒரு நாள் முத்துலிங்க சுவாமிகள் தமது சீடனை அழைத்து நீ ஊருக்கு மேற்கே உள்ள காருகுறிச்சிக்கு செல் அங்குள்ள மக்களுக்கு முடிந்த உதவிகளை செய் என்று ஆணையிட்டனர். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு சீடனும் காருகுறிச்சி சென்று குருவின் வாக்குப்படி நடந்து பின்னர் ஓரிடத்தில் நிஷ்டை கூடியிருக்கலானார். நாளடைவில் சீடர் இருந்த இடத்தில் புற்று வளர்ந்து அவர் இருந்ததே தெரியாத அளவிற்கு மறைந்து விட்டது. காலங்கள் சென்றன, சுவாமிகள் இருந்த இடமே தெரியாமல் போயிற்று.
இவ்வாறு இருக்கையில் அப்பகுதியில் வாழ்ந்த மண்பாண்டம் செய்யும் வேட்குயவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீடுகட்ட கடகால் தோண்டுவதற்கு கடப்பாறையை பாய்ச்சும் பொழுது, பூமியில் இருந்து ரத்தம் பீறிட்டது. இச்செய்தி உடனே முத்துலிங்க சுவாமிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உள்ளே நிஷ்டை கூடி இருப்பது தம் சீடனே என்பதை அறிந்த சுவாமிகள் "நம் சங்கிலியடா அது" என்று கூறிக்கொண்டே காருக்குறிச்சிக்கு வந்தார்கள். கைநிறைய சந்தனத்தை எடுத்து, குருதிக் கொப்பளித்த இடத்தில் வைத்து குருதி பெருகுவதை நிறுத்தினார்கள். அன்று முதல் மூலஸ்தானத்தில் உள்ள புற்று போன்ற மேடைக்கு சந்தனகாப்பே சார்த்தப்படுகிறது.
அன்று முதல் சங்கிலி சாமி என்றழைக்கப்பட்டு வழிபட்டார்கள். காலப்போக்கில் சங்கிலி பூதத்தார் கோயிலாக வழிபட்ட நிலையில் வழக்கம் போல் திருவிழாக்களும் நடைபெறலாயின. ஒருமுறை பூசாரி ஒருவர் வழக்கமான சந்தனக்காப்பிடும் முறையை மாற்றி வேறு பூசை செய்ய முற்பட்டார். அப்பொழுது சங்கிலிபூதத்தார் சாமியாடிய ஒருவர் அருள் வந்த நிலையில் பூசாரியை ஓங்கி அறைந்து, "இது யார் என்று நினைத்தாய் உள்ளே இருப்பது பெரிய மகானடா" என்று கூறியதாம். அதன்பிறகு மூலஸ்தானத்தில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்வதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. இன்றளவும் சுவாமிகளின் நடமாட்டம் உணர படுவதாகவும். இங்கு வந்து சுவாமிகளை வேண்டி வழிபட்டு செல்வோரின் மனக்குறைகள் தீர்க்கும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சமாதிக் கோயில் உள்ள இடம்:
தற்பொழுது நடைமுறையிலுள்ள நாதஸ்வரத்தை வடிவமைத்தவரும், தோடி ராகம் வாசிப்பதில் விற்பன்னராகவும், நாதஸ்வர சக்கரவர்த்தியாகவும், இந்தியா சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் தலைநகர் டில்லியில் நடைபெற்ற விழாவில் நாதஸ்வரம் வாசிக்கும் பெருமை பெற்றவரும் ஆகிய திருவாடுதுறை T.N.ராஜரத்தினம் பிள்ளையின் மாணவர் காருக்குறிச்சி அருணாச்சலம், குருநாதரைப் போன்றே வாசிப்பதில் தனக்கென தனியிடம் பெற்றவர். அவர் பிறந்த ஊராகிய காருகுறிச்சி, திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. அச்சிற்றூரின் மேற்பகுதியில் சாலையின் வடபுறம் காருக்குறிச்சி அருணாசலத்தின் சுதை வடிவ சிலை உள்ளது. அச்சிலையை ஒட்டிச் செல்லும் சாலையில் சென்றால் குலாலர் திரு உள்ளது. அது தெருவின் முடிவில் சங்கிலிபூதத்தார் என்று பெயர் பொறிக்கப்பட்ட கோயில் உள்ளது. அதன் கருவறையே சங்கிலி சுவாமிகளின் ஜீவ சமாதி பீடம். கருவறையில் சந்தன காப்பிட்ட புற்று உருவம் வழிபாட்டிற்கு உள்ளது.

ConversionConversion EmoticonEmoticon