ஸ்ரீ முத்துலிங்க சுவாமிகள்
👉கூனியூர்
கடந்த 2009 ஆண்டு புரட்டாசி மாதம் நடந்தது சுவாமிகளின் 342வது குருபூஜை. காலங்கள் மிகுதியாகக் கடந்ததனால் சுவாமிகளின் விரிவான வரலாறுகள் கிடைக்கவில்லை. சுவாமிகளின் சமாதி உள்ள தெருவிற்கு "சமாது கோயில் தெரு" என்றே பெயர் இருப்பதால் சுவாமிகள் அப்பகுதி மக்கள் யாவராலும் வணங்கப் பெற்று உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும். தற்பொழுது 5-வது தலைமுறையாக வழிவழி மரபில் சுவாமிகளின் சமாதி கோயிலில் பூசை தொண்டாற்றும் திரு. வேலு ஓதுவார் சுவாமிகளைப் பற்றி கூறிய செய்திகளே பின்வருபவை.
ஸ்ரீ முத்துலிங்க சுவாமிகளின் பூர்வீகம் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கிணற்றை அடுத்துள்ள "பழவூர்" எனும் பகுதியாகும். கணக்கு வழக்கற்ற திரண்ட செல்வம் மிக்க குடும்பம். மிகுந்த நில புலன்கள் உண்டு. பக்கத்துக்கு 16 கமலை குழிகள் போட்டு ஒரே நேரத்தில் நீர் இறைக்ககூடிய பெரிய கிணறு உள்ள நிலபுலன்கள் இருந்தன.
சுவாமிகள் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் செல்வாக்கோடு வளர்க்கப்பட்டார். சுவாமிகள் சிறுவயதில் தன்னொத்த சிறுவர்களுடன் மலைப் பக்கம் செல்வதுண்டு. அப்படிச் செல்லும் காலத்தில் ஒரு ரிஷியிடம் பழக்கம் ஏற்பட்டது. தாய்ப் பசுவை நாடி ஓடும் கன்றைப் போல சுவாமிகள் ரிஷியின் அருளை நாடிச் செல்லலானார். ஒரு நேரத்தில் ரிஷியை முத்து லிங்கத்தைச் சீடனாக ஏற்று சித்துக்களை சொல்லிக்கொடுத்தார். இத்தொடர்பு இவ்வாறு நீடிக்கும் வேளையில் முத்துலிங்கம் சுவாமிகளுக்கு உரிய பருவம் வந்ததால் வீட்டில் மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்யலாயினர். இதைக் கண்ட முத்துலிங்கம் தமது குருவிடம் சென்று நிகழ்பவைகளை கூறினார். அதற்கு குரு "நீ மண வாழ்வை மேற்கொண்டால் இதுகாறும் பயின்ற சித்துக்கள் பலிக்காதென்று" கூறினார்.
நன்கு யோசித்த முத்துலிங்கம் இக இன்பம் தரும் வாழ்விலும் பரஇன்பம் தரும் தவவாழ்வே சிறந்ததெனும் முடிவெடுத்தார். மனைவியை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறினார். கால் போன போக்கில் சென்று இறுதியாக தாமிரபரணிக் கரையை அடுத்த கூனியூர் வந்தடைந்தார். அவ்வூரின் சூழல் சுவாமிகளுக்கு பிடித்துப்போகவே அங்கேயே தங்கி விட்டார். சுவாமிகள் சித்த வைத்தியத்தில் நிபுணராக விளங்கினார்கள். கூனி ஊரில் தாம் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் அபூர்வ மூலிகைகளை வளர்த்து வந்தார்கள். தம்மை அண்டியவர்கெல்லாம் பெருங்காப்பாளனாக விளங்கினார்கள்.
சமீப காலங்களில் வாழ்ந்து பெரும் மகானாக, சித்தராக விளங்கிய வல்லநாடு சுவாமிகள் பல மலைகளுக்குச் செல்லுவது போல பாபநாசம் பொதிகை மலைக்கும் சென்று வருவார்கள். வல்லநாட்டில் இருந்து பாபநாசம் செல்லும் சாலை கூனியூர் வழியாகச் செல்லும். ஒருசமயம் வல்லநாடு சுவாமிகள் மகிழுந்தில் பாபநாசம் சென்றுகொண்டிருந்தார்கள். கார் கூனியூரை அடைந்ததும் மேற்கே பாபநாசம் செல்லும் பிரதான சாலையில் இருந்து வடக்கே ஊருக்குள் செல்லும் சாலையில் கார் தானாக திரும்பி ஓடியது. ஓட்டுனர் எவ்வளவு முயன்றும் வண்டி அவர் கட்டுப்பாட்டில் இல்லை. சாலை திருப்பத்தில் இருந்து சிறிது தொலைவில் முத்துலிங்க சுவாமிகளின் சமாதி வாசலில் போய் கார் நின்றது.
கார் நின்றதும் இறங்கிய வல்லநாடு சுவாமிகள் எதிரே தெரிந்த சமாதியைப் பார்த்தார். அப்பொழுது பூஜை நடந்து கொண்டிருந்தது. விருவிருவென உள்ளே சென்ற வல்லநாடு சுவாமிகள் ஒன்றி வழிபட்டார். சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத் திருமேனியின் கீழே சமாதியை மூடியிருந்த பாவுகல்லில் காதை வைத்துச் சிறிது நேரம் கேட்டார். பூசாரி வேலு ஓதுவார் இடம் சாமி இன்னும் அடங்கவில்லை. சாமி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். இது ஜீவ சமாதி. சுவாமி பேசியதைக் கேட்டேன் என்றார்.
சுமார் 340 வருடங்களுக்கு மேலாகியும் ஸ்ரீ முத்து லிங்க சுவாமிகள் நித்திய ஜீவிதராய் இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்பதற்கு இந்நிகழ்வு சான்றாகும்.
சமாதி கோயில் உள்ள இடம்:
திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் உள்ள ஊர் கூனியூர். பிரதான சாலைக்குச் சற்று வடக்கே. கிழக்கு மேற்காக உள்ள சாலை சமாது கோவில் தெரு. அத்தெருவின் மேற்கு எல்லை முடிவில் நந்தவனத்துடன் கூடிய ஸ்ரீ முத்துலிங்க சுவாமியின் சமாதிக் கோயில் உள்ளது. கருவறை அர்த்த மண்டபத்துடன் கூடிய கோயில். கருவறையில் சமாதி மீது சிவலிங்க பிரதிஷ்டை கிழக்கு பார்த்த சன்னதி.
புரட்டாசி மூலம்- குருபூஜை

ConversionConversion EmoticonEmoticon