"ஸ்ரீ சங்கர சுவாமிகள் " திருச்செந்தூர்
ஸ்ரீ சங்கர சுவாமிகள் அய்யன் பட்டர், தாத்தா சாமி, எனும் மூன்று பெயர்களாலும் சுவாமிகள் அழைக்கப்படுகிறார். ஸ்வாமிகள் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகில் உள்ள பாப்பாகுடி எனும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். சுவாமிகள் இல்லறத்தில் இருந்து கொண்டே சிவன் கோவிலில் பூசாரி வேலை பார்த்து வந்தார்கள். ஸ்வாமிகளுக்கு ஒரு மகனும் ,மகன் வழியில் ஐந்து பேரன்மார்களும் உண்டு.
ஸ்ரீ சங்கர சுவாமிகளின் அருள் நிலை வெளியுலகத்திற்கு தெரிய வேண்டிய காலம் வந்தது. கோவிலில் பூசாரியாக இருக்கும் சுவாமிகள் மீது ஊர் பொதுமக்கள் அவதூறு பிரச்சாரம் செய்தார்கள். சுவாமிகள் கோயிலின் உள்ளேயே சாராயம், கள் போன்ற மது வகைகளைக் குடிக்கிறார் என்றும், கருவாடு ,மீன் வகைகளை கோயிலுக்குள்ளேயே தினமும் சாப்பிடுகிறார் என்றும் கூறி வந்தார்கள். ஒருநாள் ஊர் பெரியவர்களும், பொது மக்களும் ஒன்றுகூடி இது உண்மையா என அறிய கோயிலுக்குள் திரண்டு வந்தார்களாம். அப்பொழுது ,சங்கர சுவாமிகள் கருவறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் வந்த நேரம் சுவாமிகள் தீபாராதனை செய்து கொண்டிருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்ததும் தீபாராதனை தட்டை தீபத்தோடு கருவறை உள்ளே அந்தரத்தில் விட்டுவிட்டு வெளியே வந்தார்கள். தீபாராதனைத் தட்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. ஊர் மக்களிடம் சுவாமிகள்," நீங்கள் என்னை சந்தேகப்பட்டால் இனி நான் இங்கே இருக்க மாட்டேன்"என்று கூறி வெளியே சென்று விட்டார்கள்.
கடையம் நித்தியகல்யாணி அம்பாள் ஆலயம் பூஜைகள் இல்லாமல் இருந்தது. சிலையின் மீது பதினாறு கலை ஓடி உள்ளது. பூசாரி பூஜை செய்தால் மறுநாள் பூசாரி இறந்துவிடுவார். இப்படிப்பட்ட நிலையில் சுவாமிகள் அம்பாளின் உக்கிரத்தைத் குறைத்து தாரணி பீடம் அமைத்து அம்பாளின் பூஜைகள் தினமும் தொடரும்படி செய்தார். மேலும், அருகிலுள்ள குகையில் நெடுநாள் தவம் செய்துள்ளார்கள். அருகில் உள்ள வடக்கு பாப்பான்குளத்தில் சங்கர சுவாமிகளின் 5 பேரன்களும் வசித்து வந்தனர். எனினும் சுவாமிகளுக்கு உணவும், உபசரிப்பும், மரியாதையும் செய்துவந்தது அழகர் பட்டாச்சாரியார் என்பவராவார். ஏகப்பட்ட அதிசயங்களை சுவாமிகள் வடக்கு பாப்பான்குளத்தில் நிகழ்த்தி உள்ளார்கள்.
ஒருமுறை, யாரிடமும் சொல்லாமல் சுவாமிகள் காசிக்கு சென்று விட்டார்கள். நெடுநாட்கள் ஆகியும் சுவாமிகள் திரும்பி வராததால் சுவாமிகளின் பேரன்களும், உறவினர்களும் திதி- தர்ப்பணம் செய்து விட்டார்கள். அன்று இரவே சுவாமிகள் எல்லோரது கனவிலும் தோன்றி "நான் உயிரோடு இருக்கிறேன். காசியில் தவம் செய்து வருகிறேன்.எனக்கு குருபூஜை செய்து வாருங்கள்"என்று சொல்லியுள்ளார்கள். சுவாமிகளின் திருவுருவச் சிலையை கல்லில் செய்து வடக்குப் பாப்பான்குளத்தில் குருபூஜை செய்து வந்துள்ளார்கள். அந்த விக்கிரகம் தற்பொழுது பத்தமடை அருகில் உள்ள கரிசூழ்ந்த மங்கலத்தில் உள்ளது. சுவாமிகள் சமாதி நிலை அடைவதற்கு முன்பு அழகர் பட்டாச்சாரியார் வீட்டில் ஒரு படத்தைக் கொடுத்துத் தினமும் பூஜை செய்து வரச் சொல்லியுள்ளார்கள்.
முக்கூடல் பிரபல சொக்கலால் ராம்சேட் பீடி அதிபர் அவர்கள் பல ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்தார்கள். ஒருமுறை சங்கர சுவாமிகள் முக்கூடல் வழியாக பாப்பாகுடி நடந்து சென்றார்கள். அப்போது சொக்கலால் அதிபர் சங்கர சுவாமிகளை கண்டு காலில் விழுந்து வணங்கினார். சுவாமிகள் அருகில் இருந்த பாறையில் ஒரு கைப்பிடி அளவு விபூதியை எடுத்து வைத்து இதை உன் மனைவியிடம் கொடு ஒரு பையன் பிறப்பான் என்றார்களாம். சுவாமிகள் கூறியபடி பிறந்தவரே பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய ஹரிராம் சேட் என்பவராவார்.
சங்கர சுவாமிகள் உடையாம்புளியில் நெடுநாள் தங்கி நிறைய அற்புதங்களை புரிந்துள்ளார். உடையாம்பாளையம் கிராம்ஸ் பிள்ளையும் தலையாரி வெள்ளையத்தேவனும் சுவாமிகளின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தனர். கிராம்ஸ் பிள்ளையின் மகள் திருமணம் கோவில்பட்டியில் நடந்த போது ஊரே திரண்டு கோவில்பட்டி சென்றது. சுவாமிகள் கிராமஸ் பிள்ளையின் வயதான தாயாருக்கு துணையாக இருக்கிறேன் என்று கூறிவிட்டார். அதேநேரம் கோவில்பட்டியில் திருமண வீட்டிலும் இருந்தார். தலையாரி வெள்ளையத் தேவருக்கு இரண்டு மனைவிகள். 17 பிள்ளைகள். 17 பிள்ளைகளுக்கும் சங்கர சுவாமிகள் தான் பெயர் வைத்துள்ளார்.
சுவாமிகள் காலையும் மாலையும் இருவேளையும் குளிப்பது வழக்கம். எப்போதும் வெண்மை நிறமான ஆடைகளையே உடுத்துவார். உடையாம்புளியில் சுவாமிகள் கொள்ளு மிகவும் விரும்பி உண்பார். சுவாமிகளைத் தரிசிக்க வரும் ஏழை விவசாயிகள் வருத்த கானத்தை கொண்டு வந்து கொடுப்பார்கள். ஒருமுறை விதண்டா வாதம் புரியும் சிலர் சுவாமிகளிடம் வருத்த கானம் முளைக்குமா? என்று கிண்டலாக கேட்டனர். சுவாமிகளும் கோபப்படாமல் வஞ்சமில்லா நெஞ்சத்திற்கு வருத்த கானம் முளைக்கும். என்று சொல்லிக்கொண்டே பூமியில் வருத்த கானத்தை விதைப்பார்கள். மூன்று நாள்களில் வறுத்த கானம் முளைத்துவிடும். சுவாமிகள் வெற்றிலைப்பாக்கு மிகவும் விரும்பி போடுவார்கள். அந்த சமயம் தீராத வயிற்றுவலி மோசமான நோய் உள்ளவர்கள் சுவாமிகளிடம் உரையாடுவார்கள் சுவாமிகள் நோயாளியை உன்னிப்பாக கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் போதே வெற்றிலை எச்சிலை நோயாளிகள் முகத்தில் துப்பிவிடுவார்கள் .அதோடு வந்தவர்களின் நோய் எல்லாம் பறந்துவிடும்.
ஒருமுறை திருநெல்வேலியில் ஒரு வெள்ளைக்கார பாதிரியார் சுவாமிகளிடம் எங்கள் இயேசுநாதர் போல் அதிசயங்கள் செய்து காட்ட முடியுமா? அப்படி செய்தால் தான் நாங்கள் நம்புவோம் நீங்கள் அருகில் உள்ள தென்னையின் இளநீரில் உயிருள்ள மீன்களை காட்ட முடியுமா? என்று கேட்டார். சுவாமிகளும் தென்னை மரத்திலிருந்து ஒரு இளநீரை தருவித்து வெட்டி காண்பித்தார் அதில் மூன்று மீன்குஞ்சுகள் நீந்தின.இதைப் பார்த்த பாதிரியார் சுவாமிகளிடம் மன்னிப்பு கோரியது உடன் சுவாமிகளை வணங்கினார். இவ்வாறு அற்புதங்கள் நிகழ்த்தும் பெரும் அருளாளராக விளங்கிய சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சுவாமிகள் தமது இறுதிக்காலத்தை திருச்செந்தூரில் நிகழ்த்தினார். திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரிலேயே கிபி 1943ஆம் ஆண்டு பங்குனி மாதம் மகம் நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்.
சமாதிக் கோயில் அமைந்துள்ள இடம் :
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருக்கோவிலுக்கு தென்புறம் கடற்கரையில் உள்ளது. அங்கு சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் கோயில் உள்ளது அதற்கு மேல்புறம் அய்யம்பட்டி சங்கர சுவாமிகள் சமாதி கோவில் அமைந்துள்ளது கிழக்கு பார்த்த சன்னதி.
ConversionConversion EmoticonEmoticon