ஸ்ரீ மருதப்ப சுவாமி-ஆழ்வார்குறிச்சி

ஸ்ரீ மருதப்ப சுவாமி

ஆழ்வார்குறிச்சி

ஆழ்வார்குறிச்சியில் சிறந்த சித்த வைத்தியராகவும், அருள்வாக்கு சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் ஞானியாகவும் வாழ்ந்தவர் மருதப்ப சுவாமிகள். ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சில கல் தொலைவில் இயற்கை அழகை அள்ளி வீசியபடி அழகான மேற்கு மலைத்தொடர் கம்பீரமாக வீற்றிருக்கிறது. அத்திரி மலை என்றழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் கடனா அணையும் ,  ஸ்ரீ சிவசைலம் ஆலயமும் அமைந்துள்ளன. அணையின் கீழ் புறம் அமைந்துள்ள "குருவப்பத்து" என்னும் சிற்றூரே சுவாமிகளின் பூர்வீகமாகும். தற்சமயம் இவ்வூர் 'பெத்தான் பிள்ளை குடியிருப்பு' என அழைக்கப்படுகிறது.

ஒருநாள் மருதப்பசாமி வழக்கம்போல் வயலில் உழுது கொண்டிருந்தார். அப்பொழுது அசரீரி வாக்கு அவரது நாக்கை நீட்டச் சொல்லி ஏதோ அட்சரம் எழுதி விட்டு மறைந்தது. அருள் நிரம்பப் பெற்ற சுவாமிகள் உழுவதை நிறுத்தி விட்டு அப்படியே புறப்பட்டுவிட்டார். கிழக்கே நடந்து ஆழ்வார்குறிச்சி வந்து சேர்ந்தார். ஆழ்வார்குறிச்சி கீழத்தெருவில் தற்பொழுது நாராயணசாமி கோயில் இருக்கும் இடம், முன்பு திடலாக இருந்தது. அங்கு வந்து சேர்ந்த ஸ்வாமிகள் ஸ்ரீ நாராயணர் , விநாயகர் ,  சுப்பிரமணியர் , நவநீத கிருஷ்ணர் ,  அனுமன் ஆகிய விக்கிரகங்களை வைத்து வழிபட்டார்கள்.

சுவாமிகள் சொல்லும் அருள் வாக்காலும் ,கொடுத்த மூலிகை மருந்துகளாலும் நலம் பெற்ற மக்கள் காணிக்கைகளை அள்ளிக் கொடுத்தனர். அந்த நன்கொடைகளை வைத்து 1902 ஆம் ஆண்டு நாராயணசாமி கோயிலை கல்லால் கட்டினார்கள்.

ஆழ்வார்குறிச்சியில் உலகுபிள்ளை என்பவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவரிடம் சுவாமிகள் "உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் .அதற்கு வாலசுப்பிரமணியன் எனப் பெயரிட்டு ,கோயிலுக்கு வாலசுப்பிரமணியன் விக்ரகம் செய்து கொடு" என்று அருள்வாக்கு கூறினார். அதன்படி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது பெயருமிட்டு விக்கிரகமும் செய்துவைத்தார். இப்பொழுதும் குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லை என்றால் கோவிலில் கருடனுக்கு பின்னால் இருக்கும் மணவடையை வலம்வந்து அர்த்தஜாம பூஜையில் சங்கு தீர்த்தம் தெளித்தால் நலமடையும் எனும் நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அருள் ஆட்சி நடத்திவந்த ஸ்வாமிகள் 1910-ஆம் ஆண்டு ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்.


சமாதிக் கோயில் உள்ள இடம் :

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பிரதான சாலைக்கு கிழக்கே உள்ளது கீழத்தெரு. அத்தெருவில் கிழக்கு பார்த்து உள்ளது நாராயணசாமி கோயில். கோவிலுக்கு நேரே கிழக்கே செல்லும் சாலை சன்னதி தெரு. அத்தெருவின் கடைசியில் சாலைக்கு வடபுறம் உள்ள தோட்டத்தில் ராம நதியின் தென்கரையில் சமாதி கோயில் உள்ளது. கிழக்கு பார்த்த சன்னதி. சுவாமிகளின் சமாதியின் மேல் சிவலிங்க பிரதிஷ்டை உள்ளது.


ஆடி சித்திரை நட்சத்திரத்தில் குருபூஜை

Previous
Next Post »